ஜனாதிபதி ரணில் மற்றும் இந்தோனேசிய அமைச்சர்கள் இடையே சந்திப்பு
இந்தோனேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தோனேசியா குடியரசின் கடல்சார் மற்றும் முதலீட்டு விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பின்சார் பந்த்ஜைதனை சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்திற்கான இலங்கையின் முன்னெடுப்பு ,நீலப் பொருளாதாரம் மற்றும் கடற்பாசி தொழில் துறை குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதேபோல், தென்துருவ நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான ஒத்துழைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
ஒருங்கிணைக்க இருதரப்பு பணிக்குழுவை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்துச் சமுத்திர எல்லை நாடுகளில் (IORA) தற்போதைய தலைவராக இலங்கையின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே, காலநிலை மாற்றங்கள் தொடர்பான செயலகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும். சிரேஷ்ட மேலதிகச் செயலாளருமான வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயோதாய் ஜி. எல். கலாகே , வனம் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவ பிரதி அமைச்சர் நானி ஹெந்தியார்த்தி, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரஹ்மத் கைமுதீன், கடல் வளத்துறை பிரதி அமைச்சர் ப்ரீமன் ஹிதாயத் , காலநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு ஆலோசகர் செரி நூர் சலீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.