ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் இலங்கை பிரதமர் ஹரிணி இடையே சந்திப்பு
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுவர் Carmen Moreno, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.
பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த உறவை மீண்டும் உறுதிப்படுத்த இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய GSP+ வர்த்தக திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி அமரசூரிய எடுத்துரைத்தார், மேலும் ஊழலை ஒழித்து அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் தனது அரசாங்கத்தின் பார்வையை கோடிட்டுக் காட்டினார்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைப் பணிப்பாளர் Takafumi Kadono, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வங்கியின் தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவதற்கான தனது நம்பிக்கையை அவர் தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.