மதுரை மீனாட்சிக்கு அரசியாக பட்டம் சூட்டப்பட்டது
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் அன்னவாகனம், பூத வாகனம், காமதேனு வாகம என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார். விருச்சிக லக்னத்தில் சிறப்பு பூஜைகளுடன் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிவித்து, ரத்தினக் கற்கள் பதித்த செங்கோல் மீனாட்சியம்மனிடம் வழங்கப்பட்டது. மதுரையின் அரசியாக மீனாட்சியம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியம்மன் ஆட்சி புரிகிறார். ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரர் ஆட்சி புரிகிறார் என்பது ஐதீகம்.
அதனை தொடர்ந்து அம்மனும் சுவாமியும் வீதி உலாவாக வந்தவர்களை மாசி வீதிகளில் பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.