நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளத்தை மீள வழங்க நடவடிக்கை!
கோவிட் தொற்றுநோய்களின் போது கலந்தாலோசிக்காமல் குறைக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நாளாந்த சம்பளத்தை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (05.10) உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிய அரச ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை குறைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட் சுற்றறிக்கை விடுத்துள்ளதாக அறிவித்து ஆசிரியர் சங்கம் மனுத்தாக்கல் செய்தது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஆசிரியர்களின் நாளாந்த சம்பளத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து மனு மீதான விசாரணையை முடித்து வைப்பதாக விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது.