அமெரிக்காவில் 1,000ஐ தாண்டியுள்ள தட்டம்மை தொற்று

அமெரிக்காவில் தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,000த்தைத் தாண்டியுள்ளதாக மாநில, உள்ளூர் புள்ளிவிவரங்கள் சனிக்கிழமை (மே 9) காட்டுகின்றன. தட்டம்மைத் தொற்றால் அங்கு மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து குறைந்தது 1,012 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவானதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவற்றுள் 70% அதிகமானவை டெக்சஸ் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டவை.
வடக்கு டக்கோட்டாவில் அண்மை தட்டம்மைத் தொற்றுச் சம்பவம் கண்டறியப்பட்டது. அங்கு 9 பேரிடம் தொற்று உறுதியானது. கிட்டத்தட்ட 180 பள்ளி மாணவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டதாக டக்கோட்டா மோனிட்டர் ஊடகம் குறிப்பிட்டது.
“மனுகுலத்தில் ஆக துரிதமாகத் தொற்றக்கூடிய நோயான தட்டம்மை காட்டுத்தீ போல் பரவுகிறது,” என்றார் பிலடெல்ஃபியா பிள்ளைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ, தடுப்பூசி நிபுணர் டாக்டர் பால் ஒஃபிட்.
மக்கள் மருத்துவ உதவியை நாடாததால் உண்மையான தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
தட்டம்மைத் தொற்றால் டெக்சஸ் மாநிலத்தில் இரண்டு சிறுமிகளும் நியூ மெக்சிக்கோவில் பெரியவர் ஒருவரும் பலியாயினர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போடாதோர்.
கொவிட்-19 நோய்ப்பரவலின்போது தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளால் அமெரிக்காவில் அதைப் போட்டுக்கொள்வோர் விகிதம் குறைந்து வருகிறது.
பாலர்ப் பள்ளிப் பிள்ளைகளிடையே 2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை தட்டம்மைத் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் 95.2% இருந்தது. 2023ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை அந்த எண்ணிக்கை 92.7% சரிந்தது.