மே 9 வன்முறை: பாகிஸ்தானில் 60 பேருக்கு 10 ஆண்டு வரை சிறை விதித்துள்ள ராணுவ நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 60 பேருக்கு ராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து உள்ளது.
அவர்களின் சிறைத் தண்டனை ஈராண்டு முதல் 10 ஆண்டு வரை ஒவ்வொருவருக்கும் அவரவரின் குற்றச் செயலுக்கு ஏற்ப விதிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை ராணுவத்தின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை (26) தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2023 மே மாதம் கைது செய்யப்பட்டபோது அந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.அப்போது நாடு முழுவதும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி அவற்றைச் சீர்குலைத்தனர்.
தண்டனை விதிக்கப்பட்டோரில் இம்ரான் கானின் உறவினர் ஒருவரும் உள்ளார். மேலும், ஓய்வுபெற்ற இரு ராணுவ அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் இதே குற்றச்சாட்டுகளுக்காக 25 பேர் தண்டிக்கப்பட்டனர்.
இப்படி அடுத்தடுத்து சிறைத் தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றங்கள் இம்ரான் கான் தொடர்பான வழக்குகளிலும் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலை எழுந்து உள்ளது.
ஆயுதப் படைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது உட்பட ஏராளமான வழக்குகளை இம்ரான் கான் எதிர்நோக்குகிறார்.
ஏராளமானோருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்படுவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்துலகச் சமூகமும் கவலை தெரிவித்து உள்ளது.