நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட மொரீஷியஸ் பிரதமர்
மொரீஷியஸ் நாட்டின் தற்போதைய பிரதமரான பிரவிந்த் ஜுக்நாத், தனது அரசியல் கூட்டணி பெரும் இழப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறி, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
“L’Alliance Lepep ஒரு பெரிய தோல்வியை நோக்கி செல்கிறது. நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன். மற்றொரு அணியை தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர். நான் நாட்டிற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், ”என்று 2017 முதல் பிரதமராக பணியாற்றும் ஜக்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் ராம்கூலம் தனது மாற்றத்திற்கான கூட்டணியின் தலைமையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
68 கட்சிகள் மற்றும் ஐந்து அரசியல் கூட்டணிகளின் பட்டியலிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 62 இடங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்கச் சென்றனர்.
பாராளுமன்றத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணி பிரதமர் பதவியையும் வெல்லும்.
கடந்த மாதம்தான், 62 வயதான ஜுக்நாத், நீண்டகால சர்ச்சையைத் தொடர்ந்து சாகோஸ் தீவுகளின் மீதான இறையாண்மையை மீண்டும் பெற ஐக்கிய இராச்சியத்துடன் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை கொண்டாடினார்.