வியட்நாம் தலைநகரில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து!! 56 பேர் உயிரிழப்பு
வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ அணைக்கப்பட்டு கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது, ஆனால் அது மோட்டார் சைக்கிள்கள் நிறைந்த கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் தொடங்கியது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
கட்டிடத்திற்குள் பலத்த சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கருப்பு புகை கிளம்பியதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஜன்னல்களைத் தடுக்கும் உலோக வேலிகளை உடைத்து, அண்டை கட்டிடத்தில் ஏணியில் ஏறியதன் மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்ததால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அங்கு செல்வதற்கு பெரும் இடையூறாக இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நூற்றுக்கணக்கானோர் தங்கள் அன்புக்குரியவர்கள் தீயில் இறந்தார்களா என்பதை அறிய நகரத்தில் உள்ள ஒரு பிணவறை அருகே கூடினர்.
வேகமாக வளர்ந்து வரும் ஹனோய் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகள் தீ பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று ஹனோய் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் நகரின் மக்கள்தொகை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.