மஸ்கெலியா மாணவன் உயிரிழந்த விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
மஸ்கெலியாயில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிறீட் சிலிண்டர் உடலில் விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன் நீதவான் எம். பரூக்தீன் இன்று (05) உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தின் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயதுடைய எஸ். அனிஷன் என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலய மைதானத்திற்கு, அருகிலுள்ள தோட்டமொன்றில் அபிவிருத்திப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட சில கொங்கிறீட் சிலிண்டர்கள் பாதுகாப்பற்ற முறையில் குவிக்கப்பட்டிருந்தன.
நேற்று மதியம் 1.30 மணியளவில் அந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலர் கழிவறை அருகே உள்ள கொங்கிறீட் சிலிண்டர் அருகே வந்துள்ளனர்.இதன்போது, உருளும் முறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரின் மேல் மாணவன் ஒருவர் ஏறியுள்ளார்.
சிலிண்டர் உருண்டதால் மாணவன் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள கழிவறை சுவரில் மோதியுள்ளார்.அதே நேரத்தில், சிலிண்டரும் மாணவனின் உடலில் மீது உருண்டுள்ளது.சிலிண்டருக்கும் கழிவறை சுவருக்கும் இடையில் சிக்கி, பலத்த காயமடைந்த சிறுவன் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாம் மேற்கொண்ட விசாரணையில், இந்த கொன்கிறீட் சிலிண்டர்கள் பாடசாலைக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது.இது பாடசாலைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டு பாடசாலை தோட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.