இராணுவச் சட்ட முயற்சி தோல்வி: ஒட்டுமொத்தமாகப் பதவி விலகும் தென்கொரிய அமைச்சரவை
தென்கொரிய அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக விரும்புவதாக அந்நாட்டுப் பிரதமர் ஹான் டக்-சூவிடம் கூறியுள்ளனர்.ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரை மேற்கோள்காட்டி, சோசுன் இல்போ நாளேடு புதன்கிழமை (டிசம்பர் 4) இத்தகவலை வெளியிட்டது.
முன்னதாக, அதிபர் யூன் சுக் இயோல் டிசம்பர் 3ஆம் திகதி இரவு ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்தார். பின்னர் நாடாளுமன்றம் அதை நிராகரித்து வாக்களித்ததால் அவர் அதை மீட்டுக்கொண்ட நிலையில் அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர்.
பிரதமர் ஹான், புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆளுங்கட்சித் தலைமைத்துவத்தையும் அதிபர் யூனின் மூத்த உதவியாளர்களையும் சந்தித்துப் பேசுவார் என்று சோசுன் இல்போ நாளேடு தெரிவித்தது.
ஆளும் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன், தற்காப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியுன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ராணுவ ஆட்சிச் சட்டத்தை அமல்படுத்தும்படி அதிபர் யூனிடம் தற்காப்பு அமைச்சர் கிம் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
கட்சித் தலைவர் ஹான், அதிபர் யூனைக் கட்சியிலிருந்து நீக்கும்படிப் பரிந்துரைத்திருப்பதாகச் செய்தியளர்களிடம் கூறினார். ஆனால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் தொடர்பில் பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளனர் என்றார் அவர்.
முன்னதாக, அதிபர் அலுவலக மூத்த ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக விருப்பம் தெரிவித்திருப்பதாக நியூசிஸ், யோன்ஹாப் செய்தி நிறுவனம் ஆகியவை டிசம்பர் 4ஆம் திகதி தகவல் வெளியிட்டன.