வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சரான மருத்துவர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் தெரிவித்தார்.
கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கைத்தொழில் கண்காட்சி இன்று (01.09) காலை ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தின் பிரதானி ராகேஸ் நடராஜன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இன்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இலங்கையிலுள்ள 20 தொழிற்சாலைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட காட்சிகூடங்களில், புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்களை Industry 2023 யாழ்ப்பாண பதிப்பு தொழில் கண்காட்சியில் காணக்கூடியதாகவுள்ளது