பெயரால் ஏற்பட்ட குழப்பம்,கணக்கு முடக்கத்திற்காக பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த மார்க் ஸக்கர்பர்க்

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ‘மெட்டா’ நிறுவனத் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் மீது வழக்கு தொடுத்துள்ளார்.வழக்கறிஞரின் பெயரும் மார்க் ஸக்கர்பர்க்.
ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறிக் கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து முறை தனது ஃபேஸ்புக் வர்த்தகக் கணக்கு முடக்கப்பட்டது என்றார் அவர். எடுத்துக்கூறினாலும் மாதக்கணக்கில் இழுத்தடித்த பின்னரே கணக்கு மீட்கப்பட்டது என்று அவர் கூறினார்.
அதனால் பல்லாயிரம் டாலர் செலவிட்டு தான் வெளியிட்டிருந்த விளம்பரங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை என்றும் வழக்கறிஞர் மார்க் கூறினார்.
செல்வாக்கு மிக்க ‘மெட்டா’ தலைமை நிர்வாகியுடன் மோதுவது தனது நோக்கமன்று என்றாலும் இதே நிலை மீண்டும் தொடர்வதை நிறுத்தத் தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் அவர்.
மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக மீட்கவேண்டும்; விளம்பரக் கட்டணம், சட்ட நடவடிக்கைக்கான செலவு ஆகியவற்றுக்கு இழப்பீடு தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
‘மெட்டா’ தலைமை நிர்வாகி மார்க்கைவிட வயதில் மூத்தவரான அவர், அந்த மார்க் ஸக்கர்பர்குக்கு முன்பே தனக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதைச் சுட்டினார்.