மொராக்கோவில் நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களில் பலர் சிக்கியுள்ளனர்!! உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அச்சம்
மொராக்கோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அழிந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேலும் நடைபெற்று வருகின்றன.
பேரிடர் பகுதிகளுக்கு நிவாரணக் குழுவினர் செல்வதற்கு வசதியாக மொராக்கோ இராணுவம் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளை சுத்தம் செய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது.
இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருவதாலும், இடிபாடுகளுக்கு மத்தியில் மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்படுவதாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இடிந்து விழுந்த கட்டிடம் ஒன்றின் அருகே 18 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதேவேளை மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நில அதிர்வுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பலர் வீடுகளுக்கு செல்ல மறுத்து வீதிகளுக்கு அருகில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொராக்கோவை நேற்று தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மர்ரகேஷ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அப்பகுதியில் 4.5 அளவிலான அதிர்வு ஏற்பட்டதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.