பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் பலர் கைது!
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த பெரும்பாலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத வேலைகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உள்துறை அலுவலகம் டேக்அவே (takeaways), ஓட்டுநர்கள், அழகு நிலையங்கள் மற்றும் கார் கழுவும் இடங்களை குறிவைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1,050 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக வேலை செய்வோரை கைது செய்வதற்காக 63 சதவீதத்திற்கும் அதிகமான கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறாக சட்டவிரோதமாக வேலை வாய்ப்புகளை வழங்குவது பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக வருபவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிப்பதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை குடியேற்ற அமலாக்க அதிகாரிகள் நடத்திய 11,000 சோதனைகளில் சட்டவிரோதமாக வேலைசெய்து வந்த 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் £5 மில்லியன் செலவழித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையிலான அரசாங்கம் டிஜிட்டல் ஐடியை (digital ID) கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





