நுவரொலியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
நுவரெலியா டொப்பாஸ் காட்டு பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்து கீழே விழுந்த நிலையில் சடலம் ஒன்று இன்று (29) மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (28) மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொப்பாஸ் காட்டு பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பொதுமக்களுக்கு ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக குறித்த சடலத்தை கண்டு நுவரெலியா காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இவ்வாறு தூக்கில் தொங்கி கீழே விழுந்த நிலையில் மீட்கப்பட்ட உருக்குலைந்த சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும்,மீட்கப்பட்ட சடலம் நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த (27) வயதுடைய ரொஷான் லக்மால் என்ற இளைஞரின் சடலமெனவும் இவர் இம்மாதம் 08 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் (Soco) இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.





