மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி விவகாரம்: முழுமையான விசாரணை அறிக்கையொன்றை தயாரிக்க கட்டளை – சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன்
மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான கட்டளை ஒன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு B/232 இன்று புதன்கிழமை(05) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே அழைக்கப்பட்ட 27 திணைக்களத்தின் பிரதிநிதிகள் சார்பில் பலர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியுள்ளார்.
அத்துடன் அரச தரப்பு சட்டத்தரணி ,விசேட சட்ட வைத்திய அதிகாரி (ஜே.எம்.ஓ), பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளும், ஓ.எம்.பி அலுவலக சட்டத்தரணிகளும், ராணுவ சட்டத்தரணிகள் போன்ற பலர் பிரசன்னமாகி இருந்த நிலையில் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட வினாக்களுக்கு அமைவாக இந்த புதை குழியில் ஏற்கனவே 376 மனித எச்சங்கள் எடுக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் அகழ்ந்து மிகுதி மனித எச்சங்களை உடனடியாக எடுக்கத் தேவையில்லை என்று ஒட்டுமொத்த தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தற்போது இந்த மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் காணாமல் போன தரப்பில் ஒட்டுமொத்த அறிக்கை(compression report) என்ற அடிப்படையிலும் இதுவரையில் நடந்தது என்ன? இனி தொடர்ந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது அவற்றை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களை சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் சார்பில் எங்களுடைய கோரிக்கைக்கு அமைவாக ராஜ் சோமதேவ் அவர்களின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும், சோக்கோ போலீஸாரின் அறிக்கையும் ஏனைய நிபுணர்களின் அறிக்கையும் ஒன்றிணைந்து அறிக்கைகளாக பெற்றுக் கொண்ட பின்னரே இது தொடர்பாக தொடர்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா இல்லையா என தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது அதை தரம் பிரிப்பு செய்யவதற்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது,
மனித எச்சங்கள் தனியாகவும் ஏனைய பொருட்கள் தனியாகவும் தரம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அதற்கு பிற்பாடு தான் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றது. இது தொடர்பாக வைத்தியர் மீண்டும் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கிறது.
இதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும்,இதுவரை நடைபெற்ற அகழ் பணியில் கண்ட விடயங்கள் நடை பெற்ற விடயங்கள் தொடர்பாகவும்,நீதிமன்றத்திற்கு வைத்தியர் ராஜபக்ஷ அறிக்கையொன்று சமர்ப்பிக்க வேண்டி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அது வரையான காலப்பகுதியில் குறித்த புதைகுழியை பொலிஸார் முழுமையாக பாதுகாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு செப்டம்பர்(9) மாதம் 12,13-ம் திகதி மீண்டும் அழைக்கப்படுவதற்காக திகதியிடப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.