மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பணிப்புரை!
தகுதிவாய்ந்த பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் மருந்து விநியோகத்தில் தற்போதுள்ள ஏகபோகத்துக்குப் பதிலாக போட்டியை உருவாக்கி, மருந்து தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு சொந்தமான உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்புக்களை ஒரு வருடத்திற்கு போதுமானதாக பேணுவதற்கான கொள்கையொன்றை தயாரிக்குமாறும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.