மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது: ஜனாதிபதிக்கு WNPS அவசர கடிதம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம் சட்டவிரோதமானது என இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (WNPS) எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அச்சங்கம் அனுப்பியுள்ள விசேட கடிதத்தில், குறித்த திட்டம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள் மற்றும் உப்பளங்கள் போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறையான அனுமதிகளைப் பெறாமல், தவறான தகவல்களை வழங்கி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மண்டைதீவு ஒரு இயற்கை வெள்ளத் தடுப்பு வலயமென்பதால், அங்கு பாரிய கட்டுமானங்களை மேற்கொள்வது எதிர்காலத்தில் பெரும் நிதி விரயத்திற்கும் பராமரிப்புச் செலவுகளுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி, இது குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.





