மலேசியாவில் பூனையைத் துன்புறுத்திய நபர்… தகவல் தெரிவிப்பவருக்கு வெகுமதி
பூனையின் தோலை உரித்து அதை ஒருவர் துன்புறுத்துவது போன்ற காணொளியையும் புகைப்படங்களையும் மலேசிய விலங்குகள் நலச்சங்கம் ஜூன் 24ஆம் திகதி ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.
இந்தக் காணொளியில் பூனையைத் துன்புறுத்தும் நபர் குறித்துத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 3,000 ரிங்கிட் (S$863) வெகுமதி அளிக்கப்படும் என்றும் அந்தத் தகவலைப் பயன்படுத்தி அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் என்றும் அந்தப் பதிவில் அச்சங்கம் தெரிவித்தது.
ஆடவர் ஒருவர் மலாய் மொழியில் பேசிக்கொண்டே கத்தியைப் பயன்படுத்திப் பூனையின் தோலை உரிக்கும் காட்சியை அந்தக் காணொளியில் காண முடிந்தது.
அந்த ஆடவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் அவர் சிலாங்கூர் வட்டாரத்தில் இருக்கும் சிற்றுண்டி கடை ஒன்றில் வேலைப்பார்ப்பதாகவும் நம்பப்படுவதாக மலேசிய விலங்குகள் நலச்சங்கம் கூறியது.
அந்தப் பூனையை அவர் துன்புறுத்திய காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஊடக நோக்கங்களுக்காக அந்த நபர் வேண்டுமென்றே பூனையைத் துன்புறுத்தியது தெரியவந்தால், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அச்சங்கம் கூறியது.