இந்தியாவில் அண்ணியின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற நபர்

மேற்கு வங்க மாநிலத்தின் பாசந்தி நகரில் சனிக்கிழமை (மே 31) காலை, நபர் ஒருவர் கூரான ஆயுதத்தால் தன் அண்ணியின் தலையைத் துண்டித்தார்.
ரத்தம் தோய்ந்த ஆயுதத்தையும் துண்டிக்கப்பட்ட தலையையும் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற அவர் பின்னர் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.அவரைத் தடுப்புக் காவலில் வைத்துக் காவல்துறை அதிர்ச்சியூட்டும் அந்தக் கொடூரமான குற்றச் செயலில் அவர் ஏன் ஈடுபட்டார் என்பதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்கிறது.
நபரின் பெயர் பிமல் மோண்டால் என்றும் கொலையுண்ட அவரின் அண்ணியின் பெயர் சதி மோண்டால் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“குடும்பத் தகராறு இந்தக் கொடுஞ்செயலுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எங்களிடம் சரணடையும்போது அவர் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. துண்டித்த தலையையும் ஆயுதத்தையும் எடுத்துவந்தார். நபரின் நடத்தையைப் பார்த்தால் அவர் சாதாரண மனநிலையில் இல்லை என்று கருதத் தோன்றுகிறது,” என்று காவல்துறை கூறியது.
வீதியில் துண்டிக்கப்பட்ட தலையுடன் அவர் சென்றதை நேரில் பார்த்த ஒருவர், அப்போது அந்த நபர்கொலையுண்ட பெண்ணையும் அவரது கணவரையும் திட்டியதாகக் கூறினார்.
“பல ஆண்டுகளாகத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழி தீர்த்துக்கொண்டதாக அவர் கூச்சலிட்டார். துண்டித்த தலையைக் கையில் ஏந்தி, கடுங்கோபத்துடன் அவர் சுற்றித் திரிந்தபோது யாருக்கும் அவரைத் தடுத்து நிறுத்தத் துணிச்சலில்லை. சிலர் அவர் அவ்வாறு செல்வதைக் கைப்பேசியில் காணொளியாகப் பதிவுசெய்தனர்,” என்று நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.
அண்மையில் அந்தப் பெண்ணும் நபரு சண்டையிட்டுக் கொண்டதாகவும் ஆடவர் அப்பெண்ணை மிரட்டியதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர்.இருப்பினும் குடும்பச் சண்டை இத்தகைய விபரீதத்தில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.