பிரித்தானியாவில் 3 கிலோகிராம் கம்மி இனிப்பை உட்கொண்டமையால் நபருக்கு ஏற்பட்ட உயிராபத்து

பிரித்தானியாவில் 3 நாட்களில் 3 கிலோகிராம் கம்மி (gummy) இனிப்புகளை உட்கொண்ட நபர் மரணத்தின் விளிம்புக்குச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
33 வயதான நேத்தன் ரிமிங்டன் (Nathan Rimington) என்பவர் மொத்தம் 10,500 கலோரிகள் உடைய இனிப்புகளை உட்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக நேத்தன் அதிக சிரமத்துக்குள்ளாகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவர் கடும் வயிற்று வலி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.
முதலில் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் மிதமிஞ்சி ஜெலட்டினை (gelatin) உட்கொண்டதே சிக்கலுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
ஜெலட்டின், கம்மி மிட்டாய்களில் சேர்க்கப்படும் பொருளாகும். அதை அதிகமாகச் சாப்பிட்டால் குடலில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
இந்த செயற்பாடு காய்ச்சல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.