லண்டனின் Big Ben கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நபர்

லண்டனின் பிக் பேன் கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கீழே இறங்கியவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் ஒரு நாள் முழுதும் அந்தக் கோபுரத்தில் பாலஸ்தீனக் கொடியைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார்.
நேற்று லண்டன் பொலிஸாருக்கு சம்பவம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அவசர மீட்புப்பணி அதிகாரிகள் சொல்லியும் அந்த நபர் தொடர்ந்து கோபுரத்தின்மேல் அமர்ந்திருந்தார்.
“நான் சொந்தமாகக் கீழே வருவேன்” என அந்த நபர் கூறியிருந்தார். அவரைக் கீழே இறங்க வைக்க அதிகாரிகள் அவருடைய உடல்நிலையைக் காரணமாகக் காட்டினர்.
காலணி அணியாமல் இருந்ததால் அவருடைய பாதத்தில் ரத்தம் கசிந்ததாகவும் அவர் அணிந்திருந்த ஆடை அவரைக் குளிரிலிருந்து பாதுகாக்கப் போதாது என்றும் அதிகாரிகள் கூறினர்.
அந்த இடத்தில் கூட்டம் கூடியது. பாலஸ்தீனை விடுவியுங்கள் என்று அவர்கள் கத்தினர். கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த நபருக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.