திருகோணமலையில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் முன்னிலையில் சந்தேக நபர் இன்று (04) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோமரங்கடவல பகுதியில் இளைஞர்களுக்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனை செய்து வருவதாக பலர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் கோமரங்கடவல பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ஏ டி குணசேகர அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக புலன் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல – 05 கனுவ பகுதியில் வசித்து வரும் 24 வயது உடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தொடர்ந்தும் போதைப்பொருள் சுற்றிவளைபுக்களை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.





