இலங்கையில் சட்டவிரோதமாக பெறப்பட்ட தொல்பொருட்களுடன் ஒருவர் கைது
கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி, ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜய கடற்படையினரும், புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் இணைந்து குறித்த பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நிலையில் வீடொன்றினை சோதனை செய்த போது, அந்த வீட்டிற்குள் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்கள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது ,தங்கத்தில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வால் ஒன்றும், ஆமை , குதிரை மற்றும் இரண்டு சிறிய சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட தொல்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர் .