இலங்கையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது!
இரத்மலானையில் உள்ள வீடொன்றில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களுக்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரால் திருடப்பட்ட சொத்துக்களில், 11 1/2 பவுண் எடையுள்ள நெக்லஸ், இரண்டு வளையல்கள் மற்றும் மோதிரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 24ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது கணவரும் பணி நிமித்தமாக வீட்டில் இருந்து சென்ற போது மூத்த மகன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் இளைய மகன் விளையாட்டிற்காக வீட்டின் முன்பக்க கதவை மூடிவிட்டு ஷூவில் சாவியை மறைத்து வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனிடையே சந்தேக நபர் வீட்டின் முன்புறம் வந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை பார்த்து அதை எடுத்து முன்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்று அலமாரியில் இருந்த தங்கத்தை திருடி சென்றுள்ளார்.
வீட்டின் முன்புறம் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் சந்தேக நபர் வீட்டின் முன் வந்து வீட்டினுள் நுழைவது பதிவாகியுள்ளது.
மேலும் இதற்கு முன்னரும் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இரத்மலானை பிரதேசத்தில் உள்ள தனியார் அடகு கடையொன்றிலிருந்து 90,000 ரூபா பெறுமதியான திருடப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எஞ்சிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 50 வயதுடைய சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.