இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணியிடம் பிறப்புறுப்பை காட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் கைது!
இலங்கை வந்த நியூசிலாந்து சுற்றுலா பயணியிடம் பாலியல் சைகைகளை காண்பித்து அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் அறுகம்குடாவை சுற்றிப்பார்க்க வந்த நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணியிடம் தனது பிறப்புறுப்பை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கிடையே குறித்த நியூசிலாந்து பெண் இது தொடர்பான தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்முனை, மருதமுனை பகுதியில் திருக்கோவில் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் குழு இன்று (16) நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரும் , அவரது மனைவியும் திருக்கோவில் பகுதியில் பல வாடகை வீடுகளில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மனைவியின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், சந்தேக நபர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றதைக் கண்டுபிடித்தனர்.
அதன்படி, சந்தேக நபர் இன்று மதியம் கல்முனை, மருதமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அப்போது, அவர் தனது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




