இந்திய ராணுவத்தினருக்கு கெடுவிதித்துள்ள மாலத்தீவு…
இந்தியா தனது ராணவ வீரர்களை மாலத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்து உத்தரவிட்டுள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு.
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான ஆட்சியாளர்கள் சீனாவின் ஆதரவாளர்களாக உள்ளனர். இந்திய எதிர்ப்பு என்பதையும் தங்களது அரசியல் நோக்கமாகக் கொண்டு ஆட்சியை பிடித்தவர்கள். தற்போது அரசு அமைத்ததும் அதனை செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்தியாவின் அண்டை தேசங்களை தனது தரப்புக்கு திருப்பி வரும் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை வரிசையில் அடுத்ததாக மாலத்தீவுக்கும் குறிவைத்தது. முகமது முய்ஸு இயல்பாகவே இந்திய எதிர்ப்பாளராக இருந்தபடியால், சீனாவின் பணியும் எளிதாக முடிந்தது.
மாலத்தீவு தேசத்தின் பாதுகாப்பு முதல் சுற்றுலா வருமானம் வரை இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அதிகம். இந்திய அரசின் சார்பிலும், இந்தியர்கள் சார்பிலும் மாலத்தீவு செழித்துள்ளது. தற்போது சொந்த செலவில் சூனியம் கதையாக, மாலத்தீவின் புதிய ஆட்சியாளர்கள் இந்திய எதிர்ப்பு என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.
அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, மாலத்தீவு காலக்கெடு விதித்துள்ளது. அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அதிபர் முகமது முய்ஸு கெடு விதித்துள்ளார்.
மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற பின்னர், அண்மையில் முதல் அரசு முறை பயணமாக சீனா சென்றார் முகமது முய்ஸு. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த சில நாட்களில், இந்தியாவுக்கு எதிரான இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் அலுவலக பொது கொள்கை செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறுகையில், “மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் இனி தங்க முடியாது. இது அதிபர் முகமது முய்ஸுவின் கொள்கை மற்றும் அரசு நிர்வாகத்தின் கொள்கை அடிப்படையிலான முடிவு” என்றார். மாலத்தீவில் சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர்.