சட்டவிரோதமாக பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்த மலேசியர்கள் மற்றும் சீனர்கள் கைது
மலேசியாவின் சாபா மாநிலத்தில் இருந்து பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 11 பேரை பிலிப்பீன்ஸ் கடலோர காவல்படை தடுத்துவைத்துள்ளது.
தடுத்துவைக்கப்பட்டவர்களில் மூவர் மலேசியர்கள். மற்ற 8 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். பிடிபட்ட 11 பேரில் 9 ஆண்கள் 2 பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாபாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள செம்போர்னாவில் அவர்கள் தங்கியுள்ளனர். இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர்.
அப்போது காவலில் இருந்த பிலிப்பீன்ஸ் கடலோர காவல்படையினர் சட்டவிரோதமாக கடல் பகுதிக்குள் நுழைந்தவர்களை கைது செய்தனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் தடுத்துவைக்கப்பட்ட அனைவரும் சுற்றுலா பயணிகள் என்றும் அறியாமல் அவர்கள் பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் கூறினர். விசாரணை தொடர்கிறது.