மியான்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ள மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்
மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.மியன்மாரில் சில தரப்பினர் மீது அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுவதும் முடிவுக்கு வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.ஆசியான் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்பதற்குமுன் அன்வாரின் வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
அன்வார் ஜூன் 6ஆம் திகதி நடைபெற்ற 37வது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டில் முக்கிய உரையாற்றினார்.
ஆசியான் நாடுகள் ஒன்பதின் தலைவர்களும் மியன்மார் ராணுவ ஆட்சியாளரும் மியன்மார் தொடர்பில் இணக்கம் கண்ட ஐந்து அம்சங்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மலேசியப் பிரதமர் வலியுறுத்தினார்.
மியன்மாரில் அமைதி, சிறப்பான மனிதநேய நடைமுறைகள், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் நடைமுறை ஆகியவற்றை வலியுறுத்துவதற்கு ஆசியான் அமைப்பில் பங்குபெறும் இதர நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மலேசியாவின் கடப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார்.மியன்மாரில் நிலவும் நெருக்கடி நாம் சமாளிக்க வேண்டிய கடினமான சவால் என்றார் அன்வார். மியன்மாரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, தொடரும் போர் ஆகியவற்றை அவர் சுட்டினார்.
“ஆசியான் விடுக்கும் செய்தி ஒருமித்த குரலைக் கொண்டிருக்க வேண்டும். உறுப்புத்துவம் வகிக்கும் நாடு ஒன்று, ஆசியான் சாசனத்தை மீறுவதாக நம்புவதற்குப் போதிய காரணங்கள் இருக்கும்போது அதை எதிர்த்துச் செயல்படத் தவறினால், அது நமது தார்மீகக் கடமையை அலட்சியப்படுத்துவதாகும்,” என்றார் அவர்.
பல்வேறு வகைகளில் மியன்மாருக்கு ஆசியான் உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார், ஆனால் மியன்மாரின் பல தரப்புகளும் தயாராக இருந்தால்தான் இது சாத்தியம் என்று கூறினார்.
“மியன்மாரில் கூட்டமைப்பு போன்ற அமைப்புமுறையின் சாத்தியம் குறித்துக் கலந்துபேசலாம். மியன்மார் மக்களுக்கு எது நன்மை அளிக்கக்கூடியது என்பதை நாம் முடிவு செய்ய இயலாது என்றாலும் நண்பர்கள், பக்கத்து நாட்டினர் என்ற முறையில் தேவையான வழிகளில் உதவுவது நமது கடமை,” என்று அன்வார் தமது உரையில் குறிப்பிட்டார்.