காஸா,லெபனானில் உடனடி போர் நிறுத்தத்துக்கு மலேசியா மற்றும் எகிப்து வலியுறுத்தல்
காஸாவிலும் லெபனானிலும் மனிதாபிமான நெருக்கடிநிலை மோசமடையாமல் இருக்க உடனடி போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மலேசியாவும் எகிப்தும் அழைப்பு விடுத்துள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எகிப்துக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவரும் எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டா அல் சிசி இணக்கம் தெரிவித்தனர்.போர் காரணமாக நிலைகுலைந்திருக்கும் காஸா முனை பற்றி இருவரும் கலந்துரையாடினர்.
“காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை மலேசியா அனுப்பிவைக்கிறது. அப்பொருள்கள் காஸா மக்களைச் சென்றடைய தேவையான ஏற்பாடுகளை எகிப்து செய்து வருகிறது. இதற்கு மலேசியா நன்றி தெரிவித்துள்ளது,” என்று இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுதந்திரப் பாலஸ்தீனத்துக்குத் அன்வாரும் அல் சிசியும் மீண்டும் குரல் கொடுத்தனர்.பாலஸ்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது என்று அவர்கள் கூறினர்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உறுப்பினராவதற்குப் பாலஸ்தீனம் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை ஐநா மறுபரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
லெபனானில் தாக்குதல் நடத்துவதன் மூலம் அனைத்துலகச் சட்டம், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை இஸ்ரேல் தொடர்ந்து மீறுவதாகப் பிரதமர் அன்வார் சாடினார்.