மலேசியா – குனுங் முலு தேசிய பூங்காவில் 500 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிர்பிழைத்த 75 வயதான ஹைக்கர்

மலேசியாவில் உள்ள குனோங் முலு தேசியப் பூங்காவில் 500 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த 75 வயது பெண் தலைக் காயங்களுக்கு ஆளாகி உயிர் தப்பியுள்ளார்.
அப்பூங்காவில் உள்ள 500 மீட்டர் உயரம்கொண்ட மேடான பகுதியில் ‘ஹைக்கிங்’ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எலிசா பால் என்ற பெண் வியாழக்கிழமை (ஜூலை 24) விழுந்ததாக தி போர்னியோ போஸ்ட் ஊடகம் தெரிவித்தது. பூங்காவின் ஐந்தாம் முகாமுக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக சரவாக் தீயணைப்பு மீட்புப் பிரிவு தெரிவித்தது.
பூங்காவின் ஐந்தாம் முகாம், அங்கு மலையேறிகள் பொதுவாக ஓய்வெடுக்கும் பகுதியாகும்.
மருடி மலைக் குகை தேடல், மீட்புக் குழுவிடமிருந்து (மொக்சார்) மருடி பொம்பா நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. உடனடியாக மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
எலிசா பாலின் தலையிலிருந்து ரத்தம் கசிவதை உடனடியாக நிறுத்த மீட்புப் பணியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிகிச்சையளிக்க அந்த பெண் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மிரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்க் குழு பெண்ணுடன் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.