மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த வடக்கு மக்களின் ஆதரவை பெற்ற அநுர – வாழ்த்திய நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வடக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வடக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது
குறித்த வெற்றியானது அரசியல் நோக்கத்தை அடைவதற்கான வாக்குறுதியா? இல்லையெனில் நேர்மையான செயல்முறையா? என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உன்னிப்பாகக் கவனிக்கும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார, சமூக நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கும் ஜனரஞ்சகமான ஆட்சிக்கும் தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றி பயன்படும் என தாம் நம்புவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த கட்சி என்ற வகையில், ஒன்றிணைந்த நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு நடவடிக்கையையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுமதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஜனரஞ்சக அரசியல் கட்சி என்ற வகையில், இறையான்மையான நாட்டிற்கான தமது கொள்கைகளை வழிநடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனரஞ்சக நடவடிக்கைகளுக்குத் தயங்காமல் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.