டெல்லியில் நடைபாதையில் உறங்கியவர்கள் மீது ஏறிச்சென்ற சொகுசு கார்: சிறுமி உட்பட ஐவர் காயம்

தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த புதன்கிழமை ஜூலை 9) நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது.
நள்ளிரவு 1.45 மணி அளவில் வசந்த் விஹாரின் ஷிவா கேம்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது ஆவ்டி சொகுசு கார் பாய்ந்ததில் அவர்கள் அனைவரும் காயமடைந்தனர்.
இரண்டு தம்பதியினரும் எட்டு வயது சிறுமியும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கூலி வேலை செய்வதற்காக டெல்லி வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்.
இந்நிலையில், சொகுசு காரை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.விபத்து குறித்து தகவல் அறிந்த வசந்த் விஹார் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அதற்குள் அங்கு இருந்தவர்கள் காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் விளக்கினர்.இது குறித்த விசாரணை நடக்கிறது.
சொகுசு காரை ஓட்டியது டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த 40 வயதான உட்சவ் சேகர் என்பது உறுதியாகி உள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மது போதையில் காரை இயக்கியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது