லூனா-25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் திகதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது.
கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.
ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிகட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், தற்போதைய பாதையிலேயே லூனா – 25 விண்கலம் சுற்றி வருகிறது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது