இந்தியாவில் நடைபாதையில் ஏறிய லொரி: குழந்தைகள் உட்பட மூவர் பலி, அறுவர் காயம்
லொரி நடைபாதையின் மீது ஏறியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அறுவர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் திங்கட்கிழமை (டிசம்பர் 23) அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 1 மணியளவில் டிப்பர் லொரியை வேகமாக ஒட்டி வந்த கஜானன் ஷங்கர் டோட்ரே, 26 நிலை தடுமாற, லொரி நடைபாதையின் மீது ஏறியது. அவர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது.
அப்போது அங்கே உறங்கிக்கொண்டிருந்த ஒன்பது பேரின் உடல்கள் நசுங்கியதில், ஒரு வயது வைபவி ரித்தேஷ் பவார், இரண்டு வயது வைபவ் ரித்தேஷ் ஆகிய இரு குழந்தைகளும் 22 வயது விஷால் வினோத் பவாரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த மற்ற அறுவரை சசூன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மூவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
“லாரி ஓட்டுநரைக் கைது செய்துள்ளோம். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்,” என்று காவல்துறை குறிப்பிட்டது.
இதற்கிடையே, பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் வேகமாக வந்த ‘பிக்-அப்’ வாகனம் மோதியதில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்தனர். எட்டுப் பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) நடந்த அச்சம்பவம் தொடர்பில் தப்பியோடிய வாகனமோட்டி தேடப்பட்டு வருகிறார்