இந்தோனேசிய அமைச்சரவை மறுசீரமைப்பில் நீண்டகாலமாக நிதியமைச்சர் பதவி வகித்த ஸ்ரீ முல்யானி நீக்கம்

வன்முறைப் போராட்டங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அமைச்சரவையில் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளார்.
இதில், நீண்டகாலமாகப் பதவி வகித்து வந்த நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பொருளியல் நிபுணர் பர்பயா யுதி சதேவா புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அமைச்சரவை மாற்றத்தால் மேலும் நான்கு அமைச்சர் பதவிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிதாக ஹஜ், உம்ரா அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பர்பயா, 61, ஓர் அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர். அவர் இந்தோனீசிய வைப்பு நிதிக் காப்புறுதிக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். பண்டுங் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
டாக்டர் பர்பயா, கடல்துறை, முதலீட்டு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சில் கடல்துறை, எரிசக்தி ஒருங்கிணைப்புத் துணைத் தலைவர், அத்துடன் கடல்துறை விவகாரங்கள், அரசியல், சட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருக்குப் பொருளியல் சிறப்பு அதிகாரி போன்ற உயர்மட்ட அரசுப் பதவிகளை வகித்துள்ளார்.
இதற்கிடையில், அரசியல், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக இருந்த புடி குணவானும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
இந்தோனீசிய வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அப்துல் காதிர் கார்டிங்கிற்குப் பதிலாக முக்தாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.கூட்டுறவு அமைச்சராக இருந்த புடி ஆரி செட்டியாடிக்கு மாற்றாக ஃபெரி ஜோகோ ஜூலியான்டோனோ பொறுப்பேற்றுள்ளார்.இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் டிட்டோ ஆரியோதேஜோவும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகப் புதிய அமைச்சர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதியதாக உருவாக்கப்பட்ட ஹஜ், உம்ரா அமைச்சின் அமைச்சராக முகமது இர்ஃபான் யூசுஃப் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக தஹ்னில் அன்சார் சிமன்ஜுண்டக் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்சர்களின் பதவியேற்பு திங்கட்கிழமை (செப்டம்பர் 8) அரசு மாளிகையில் நடைபெற்றது.