நியூயோர்க் மற்றும் பெர்லினை விடப் பாதுகாப்பானதா லண்டன்?
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் கொலைக் குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக மெட்ரோபாலிட்டன் (Metropolitan) பொலிஸார் அறிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் 97 கொலைச் சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
இது 2014ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
தற்போது லண்டனின் கொலை விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 1.1 ஆக உள்ளது.
இது நியூயோர்க், பெர்லின் மற்றும் மிலான் போன்ற உலகளாவிய நகரங்களை விடக் குறைவானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2021இல் 30ஆக இருந்த பதின்ம வயது கொலைகள், கடந்த ஆண்டில் எட்டாகக் குறைந்துள்ளன.
குற்றக் கும்பல்களுக்கு எதிரான துல்லியமான நடவடிக்கை மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடே இந்த வெற்றிக்குக் காரணம் என பொலிஸ் ஆணையர் சேர் மார்க் ரௌலி (Sir Mark Rowley) தெரிவித்துள்ளார்.
எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் குறைக்க மேலதிக நடவடிக்கைகள் தேவை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.





