மக்களவை தேர்தல் ; பாஜக-வின் கனவைத் தகர்த்த உத்தரப் பிரதேசம்
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதிலும், பாஜக அணிக்கு 340 தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும் என்றுதான் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், இந்த கணிப்புகளை உத்தரப் பிரதேச மக்கள் மாற்றி அமைத்துள்ளனர். அது மட்டுமல்ல, பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகவும் காரணமாகிவிட்டனர்.
குஜராத் மாநிலத்துக்குப் பிறகு பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டது உத்தரப் பிரதேச மாநிலம்தான்.மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், பாஜக குறைந்தபட்சம் 62 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பல்வேறு செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி 64 இடங்களில் வெற்றி கண்டது. அதற்கு முந்தைய மக்களவைத் தேர்தலிலும் (2014) பாஜக அணிக்கு 71 இடங்கள் கிடைத்தன.இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளனர்.ஆனால், இம்முறை உத்தரப் பிரதேச மக்களின் தீர்ப்பு வேறாக அமைந்துவிட்டது. ஜூன் 4ஆம் திகதி, பாஜக 34 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இது கடந்த தேர்தலைவிட ஏறக்குறைய 30 இடங்கள் குறைவாகும்.
புதிதாக கட்டப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராமர் கோவில் உள்ள ஃபைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஏறக்குறைய 340 இடங்களை பாஜக கைப்பற்றும் என ஜூன் 4ம் திகதி மாலை வரையிலான நிலவரங்கள் தெரிவித்தன.340 தொகுதிகள் எனக் கருத்துக்கணிப்புகள் வெளியாகும் முன்பு, 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மற்ற மாநிலங்களைவிட உத்தரப் பிரதேச பாஜகவினர் உரக்க தெரிவித்தனர்.
இம்முறை சமாஜ்வாடி கட்சி பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.மேலும், பிரியங்கா காந்தி அம்மாநிலத்திலேயே முகாமிட்டு, தீவிர களப்பணியாற்றினார். ராகுல் அம்மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியைத் தேர்வு செய்து அங்கு போட்டியிட்டார்.ஆனால், முதல்வர் யோகி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதால் 75 தொகுதிகள் என்ற இலக்கை அடைந்துவிடலாம் என அம்மாநில பாஜக தலைமை உறுதியாக நம்பியது.
உத்தரப் பிரதேசத்தில் முன்பு போல் 70 அல்லது இம்முறை எதிர்பார்த்தது போல் 75 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தால் 350 தொகுதிகளில் வெற்றி என்ற கணிப்பு மெய்யாகி இருக்கும். குறைந்தபட்சம், அக்கட்சிக்கு ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்கும்.
கூட்டணிக் கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி அமைச்சரவையை அமைத்து தனது திட்டங்களை வரிசையாகச் செயல்படுத்த பாஜக இந்நேரம் தயாராகி இருக்கும். இப்போது கூட்டணிக் கட்சிகளின் தயவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.