வவுச்சர்கள் கிடையாது – 1.5 இலட்சம் மாணவர்களுக்கு உள்நாட்டுத் தயாரிப்பு பாதணிகள்
250 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வவுச்சர்களுக்குப் பதிலாக, தரமான உள்நாட்டு உற்பத்தியிலான பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்னிலையில் கல்வி அமைச்சில் கையெழுத்தானது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் 9 உள்நாட்டு பாதணி உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1,302 பாடசாலைகளைச் சேர்ந்த 150,521 மாணவர்கள், 354 பிரிவேனாக்களைச் சேர்ந்த 12,146 மாணவர்களுக்கு இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட உத்தரவாதத்துடன் கூடிய தரமான பாதணி ஜோடி ஒன்றிற்கு 2,100 ரூபா மட்டுமே அறவிடப்படும் என நிறுவனங்கள் இணங்கியுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 140 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தொழில் அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மட்டுமே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேரடியாகப் பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களின் அளவுகளுக்குப் பொருத்தமான பாதணிகளை வழங்க இணங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





