” பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்” – ஜனாதிபதி அறைகூவல்!
“விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake. தெரிவித்தார்.
எனவே, மேற்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் ஒரு தேசமாக நாம் இழந்த பொருளாதார வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.
இதற்காக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், அதில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
‘தலைமுறை தலைமுறையாக வலுவான நாளையை உருவாக்கும் இன்று’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.
“ தற்போது மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஒரு வெளிப்புற அதிர்வு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 42மூ அதிகரித்துள்ளதால் உலகச் சந்தையில் கடும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.
இது உள்நாட்டு நுகர்வோர் மத்தியிலும் நம்பிக்கையற்ற தன்மையை காணக் கூடியதாக இருந்தது.
மார்ச் 1ஆம் திகதி 4500 கிலோ லீட்டராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதி 10,500 கிலோ லீட்டராக அதிகரித்துள்ளது.
2022 இல் டொலர் தட்டுப்பாட்டினால் நெருக்கடி ஏற்பட்ட போதும் இம்முறை ஏற்பட்டிருப்பது விநியோகப் பாதைகள் முடங்கியதால் வந்த விநியோக நெருக்கடியாகும்.
இதனைத் தனித்தனியாக அல்லாமல் அனைவரும் கூட்டாக நின்று எதிர்கொண்டு வெல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் ‘பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை’ அமைத்துள்ளதுடன், விநியோகத்தைத் தடையின்றிப் பேண நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





