இலங்கை செய்தி

“நாட்டில் நல்லிணக்கம் பிறக்கட்டும்: தமிழர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்”

“நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.”

இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya அறைகூவல் விடுத்துள்ளார்.

பிரதமரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு,

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இத்திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களே. இயற்கையை மீறி எம்மால் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது.

இயற்கையினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் கைமாறு செய்வது மிக உயர்ந்த மனிதப் பண்பாகும்.

நாடு என்ற ரீதியில் நாம் இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்கின்றோம்.

கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக, மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ஒரு ‘மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

சவால்கள் நிறைந்ததாக இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாம் அந்தப் பொறுப்பை ஏற்று, தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருடத்தை உறுதியுடன் ஆரம்பித்துள்ளோம்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதேபோல, நாட்டின் சுபீட்சத்திற்காக நாம் மேற்கொள்ளும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பது போன்றதே.

இத்தருணத்தில், இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, வளமான கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது.

ஒருவரையொருவர் மதித்தல், பிற மத மற்றும் கலாச்சார உரிமைகளைப் பேணுதல் போன்ற உயரிய பண்புகளுடன், நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.

தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இப்புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இத்திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!