பொருட்களின் விலையை ஏற்றினால் கடும் நடவடிக்கை: வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய பேரிடர் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துதல், பொருட்களைப் பதுக்குதல் அல்லது மறைத்தல் போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் (unfair or malicious trading practices) ஈடுபடும் வணிகம் அல்லது தனிநபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் இன்று (டிசம்பர் 1, 2025) அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி (B.K. Prabath Chandrakeerthi) அவர்கள் கூறுகையில், தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பயன்படுத்தி, சில வர்த்தகர்கள் நுகர்வோர் பொருட்களை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“அத்தியாவசிய சேவைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை ஆகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் “இலங்கைச் சமூகம் முன்மாதிரியான ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய இச்சமயத்தில், நியாயமற்ற அதிக விலையில் நுகர்வோர் பொருட்களை விற்பதன் மூலம் சட்டவிரோத இலாபம் ஈட்ட முயற்சிப்பது தார்மீகமற்றதும் சட்டவிரோதமானதுமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து வர்த்தகர்களும் பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்:
ஒவ்வொரு குடிமகனுக்கும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொருட்கள் மீது அதிகபட்ச சில்லறை விலை (Maximum Retail Price – MRP) குறிக்கப்பட்டிருந்தால், அந்த விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும்.
மற்ற அனைத்துப் பொருட்களும் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நியாயமற்ற விலையேற்றம் அல்லது பதுக்கல்கள் குறித்துப் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




