லெபனான் எல்லையில் பூசல்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விட்டுத்துள்ள ஹிஸ்புல்லா
லெபனான் உடனான எல்லை அருகே உள்ள பகுதிகளில் இடம்பெயர்ந்த 100,000 பேரை அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நோக்கம் கொண்டிருக்கும் இஸ்ரேலின் போர் முயற்சி, மேலும் நூறாயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துவிடும் என ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் தளபதி எச்சரித்துள்ளார்.
வடக்கு இஸ்ரேலில் பாதுகாப்பை பழைய நிலைக்குக் கொண்டுவர இஸ்ரேல் உறுதியுடன் இருப்பதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியதைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைக் கொண்ட லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் தளபதியான நயிம் காசிம் இந்த எச்சரிக்கையை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டார்.
“வடக்கில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், நாங்கள் அதற்குத் தயாராகி வருகிறோம்,” என கடந்த வாரம் காலண்ட் ராணுவப் படைகளிடம் கூறினார்.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பேசிய காசிம், “போருக்குச் செல்ல எங்களுக்கு எண்ணமில்லை. ஏனெனில், அது பயன் தராது என நாங்கள் கருதுகிறோம்.
“என்றாலும், இஸ்ரேல் போரைத் தொடங்கினால், நாங்கள் அதை எதிர்கொள்வோம். இருதரப்புக்கும் பெருத்த சேதம் ஏற்படும்,” எனக் கூறினார்.
பூசல் காரணமாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் வசித்த ஆயரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.