நில வாடகைக்கு முற்றுப்புள்ளி” ; இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆண்டுக்கு 250 பவுண்டுகள் உச்சவரம்பு அமல்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குத்தகை வீடுகளுக்காக செலுத்தப்படும் நில வாடகைக்கு உச்சவரம்பு ஒன்றை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.
தொழிற்கட்சியின் 2024 தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில், கட்டுப்பாடற்ற நில வாடகை வசூல்களை ஒழுங்குபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
உச்சவரம்பு எவ்வளவு என இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது ஆண்டுக்கு சுமார் 250 பவுண்டுகளாக இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முடிவு ஓய்வூதிய நிதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தனது உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் வீட்டுவசதி செயலாளர் ஏஞ்சலா ரெய்னர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது சுமார் ஐந்து மில்லியன் குத்தகை வீடுகள் உள்ளன. 2022ஆம் ஆண்டு முதல் புதிய குத்தகை வீடுகளுக்கு நில வாடகை இரத்து செய்யப்பட்டாலும், பழைய வீடுகளுக்கு அது தொடர்ந்தே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில், குத்தகைதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நில வாடகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.





