இலங்கையில் ஈரானிய கப்பல் பயணிகளுக்கு அடைக்கலம்: ஜனாதிபதிக்கு ரிஷாட் பாராட்டு
ஈரான் கப்பலில் இருந்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம் – ஈரான் மீது திணிக்கப்பட்டது. அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தருணத்தில் ஈரானின் இரண்டு கப்பல்களிலும் பயணித்த மொத்தம் 240 ஈரானிய பிரஜைகளை, ஜனாதிபதியின் துணிவான முடிவின் மூலம் காப்பற்றக் கிடைத்தமையினால், உலக வரலாற்றில் இலங்கை உயர்ந்து நிற்கிறது” என்றும் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.
ஈரானின் கப்பல்களில் இருந்த நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய படையினரையும் பராட்டி – நன்றி தெரிவிப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.





