அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் சுட்டுக்கொலை ; தப்பியோடிய கொலையாளியை தேடி வலைவீச்சு
அவுஸ்திரேலியாவின் ‘லேக் கார்ஜெல்லிகோ’ (Lake Cargelligo) நகரில் கடந்த 22 ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 7 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தற்போதைய துணைவர் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதான சோஃபி குவின் (Sophie Quinn) மற்றும் ஜான் ஹாரிஸ் (John Harris) ஆகியோர் வாகனத்தில் இருந்தபோது, அங்கிருந்தவாறே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சோஃபியின் அத்தையும் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலை சோஃபியின் முன்னாள் துணைவரான ஜூலியன் இங்கிராம் (Julian Ingram) நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குடும்ப வன்முறை வழக்கில் பிணையில் இருந்த இங்கிராம், இக்கொலைகளைச் செய்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் கடந்த 23ம் திகதி தப்பியோடியுள்ளார்.
அவர் சிறந்த குறிபார்க்கும் திறன் கொண்டவர் என்பதாலும், அப்பகுதி புவியியல் பற்றி நன்கு அறிந்தவர் என்பதாலும் அவரைப் பிடிப்பது சவாலாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று சந்தேக நபர் மவுண்ட் ஹோப் (Mount Hope) பகுதியில் சந்தேக நபர் தென்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.





