மக்கள் வாழ முடியாத வண்ணம் வெப்பத்தால் தகிக்கும் குவைத்
மத்திய கிழக்கு நாடுகளில் முக்கிய நாடு ஒன்று தற்போது மக்களால் வாழ முடியாத வகையில் கடுமையான வெப்பத்தால் தகித்து வருவதாக கூறுகின்றனர்.
ஈராக் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு இடையில் அமைந்துள்ள குவைத்தில் கடந்த 2016 ஜூலை மாதம் 21ம் திகதி உலகிலேயே மூன்றாவது மிக அதிக வெப்பம் பதிவானது. அன்றைய நாள் குவைத்தில் 54C வெப்பம் பதிவானது.அதன் பிறகு 2021ல் ஜூலை மாதம் தொடர்ந்து 19 நாட்கள் 50C வெப்பத்தை பதிவு செய்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்படும் என்றே ஆய்வாளர்கள் தரப்பு கவலையுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே, இந்த நூற்றாண்டின் முடிவில், குவைத்தில் வெப்பமானது சுமார் 5.5C அளவுக்கேனும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் அதிகரித்து வருவதால், பருவ மழை பொய்த்துப் போவதுடன், ஏற்கனவே வறண்டு போயுள்ள நாட்டில், புழுதிப் புயல்களின் தீவிரம் அதிகரிக்கும் என்றே அச்சம் தெரிவித்துள்ளனர்.
வெப்பம் அதிகரிக்க, பறவைகள் கொத்தாக இறந்து விழும் நிலையும், வளைகுடாவில் கடல் குதிரைகள் வெந்து போகும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. 50C வெப்பம் கூட மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறுகின்றனர்.வெப்பத்தால் ஏற்படும் சோர்வு, இருதய பிரச்சனைகள் மற்றும் மரணம் கூட சமயங்களில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கூறுகின்றனர். இதனையடுத்தே, வெப்பத்தால் உயிர் இழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அத்துடன் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளதுடன், திறந்தவெளி தெருவோர கடைகளை கட்டுப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த ஆண்டு, முதன்முறையாக, இரவில் இறுதிச் சடங்குகளை நடத்த அனுமதித்து குவைத் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.இதனால் மக்கள் நிம்மதியாக சடங்குகளில் பங்கேற்க முடியும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையானது 5.1 சதவீதத்தில் இருந்து 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும், இதில் குவைத் குடிமக்களல்லாவர்கள் எண்ணிக்கை 15 சதவீதம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.