கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் மீள இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.
இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமா என்ற ஐயம் பல்வேறு தரப்பினரிடமும் நிலவிய நிலையில் மீண்டும் இன்றையதினம் (20.11.2023) காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் அகழ்வு பணியானது முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இறுதியாக அகழ்வு பணிகள் நிறைவடைந்ததும் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த பொலித்தீன் உறைகள் , உடல் எச்சங்களுக்கு மேற்பகுதியில் காணப்பட்ட மண்கள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
இதேவேளை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் அகழ்வு இடத்திற்கு வருகை தர தாமதம் நிலவிவருவதாக தகவல்கள் தெரியவருகின்றது.
குறித்த சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர்
தற்பரன், சட்டத்தரணிகளான வி.கே.நிறஞ்சன், கு.ஆன்சுமங்கலா மற்றும் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொலிஸார், தடயவியல் பொலிஸ் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடியதன் பின்னர் குறித்த அகழ்வுப்பணியானது ஆரம்பமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.