“கிங்டம்” ஈழத் தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கிங்டம் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சைக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் கிங்டம். இப்படத்தில் இந்தியாவிலிருந்து அகதிகளாக இலங்கை செல்பவர்களை அங்கிருக்கும் இலங்கைத் தமிழர்கள் அடிமைகளாக மாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதனால், ஒரு தெலுங்கு திரைப்படம் தமிழர்களை மோசமாக சித்திரித்துவிட்டதாகப் படத்திற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்ததுடன் திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் கிங்டம் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
இந்த நிலையில், இப்பிரச்னை தீவிரமடைந்துள்ளதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப்பட்டோம்.
தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி” எனத் தெரிவித்துள்ளனர்.