கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு -மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்கு இன்று காலை சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர்.
அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்து, உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
பொலிஸார் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விசாரணைகளின்படி, மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
நேற்று அவர் தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரது மகளைத் தூக்கி வீசிவிட்டு, குறித்த பெண்ணை தாக்கி இந்தக் கிணற்றுக்குள் தள்ளியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதே கிணற்றினுள் மற்றுமொரு சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.
இச்சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் காணப்பட்ட காலணியை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ள போதிலும், முறையான மரண விசாரணை மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் பின்னரே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் கடத்தப்படும் பெண்கள், கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் வீசப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அவர்கள் இக்கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே இதன் பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





